May 17, 2020
தண்டோரா குழு
கோவை பழங்குடி மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகேயுள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதை பற்றியும்,சங்கவி என்ற பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து,மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் உத்தரவின் பேரில், மதுக்கரை வருவாய் வட்டாட்சியர் சரண்யா மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழை வழங்கினார். ஏற்கனவே ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் மாணவி சங்கவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியதோடு, நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்பிற்கான செலவை ஏற்று கொள்வதாக உறுதியளித்தனர். இதேபோல அப்பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது. மற்ற மலசர் பழங்குடிகளுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதி உள்ளிட்டவை செய்து தர மாவட்ட நிர்வாகம் பணிகளை தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.