August 18, 2020
தண்டோரா குழு
கோவை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.தொடர்ந்து கொரோனா தாக்கம் இருப்பதால் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமில்லை என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாத பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அரசு பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக அரசு மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.சமூக இடைவெளியை பின்பற்றியவர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர்.
மேலும் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்த மாணவர்களுக்கு உடனடியாக அட்மிஷன் போடப்பட்டது. அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் டூவீலரில் பள்ளிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது தொ்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டது. உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடன் மாணவர் சேர்க்கை நடந்தது.
மேலும் அரசு பள்ளிகளில் தமிழ்வழிப் பாடத்தில் சேர்வதை விட ஆங்கில வழி பாடத் திட்டத்தில் சேருவதற்கு பெற்றோர் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் பொதுவாக அரசு பள்ளிகளில் சேருவதற்கு நாங்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் ஆனால் தற்போது பெற்றோர் தாமாக முன்வந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் உள்ள இங்கிலீஷ் மீடியம் இடங்கள் வேகமாக நிரம்பி வருகிறது என்றனர்.