September 22, 2020
தண்டோரா குழு
நடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தில் எங்கு சென்றாலும் நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் இருந்து பெற்றுத் தரப்படும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர், கடந்த 17ம் தேதி திண்டுக்கல் மேட்டுபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து பழனி, கோவை மற்றும் கோபிசெட்டிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.மனுவில் அறவழியே நம் வழி அவர்களை போல சட்டத்தை மீறி நடக்காமல் சட்டபடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்ற தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த மனுவில், சூர்யாவை இழிவுபடுத்தும் நோக்கிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தர்மா மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.