July 8, 2020
தண்டோரா குழு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 800ஐ கடந்தது. இந்நிலையில், கோவை வீரபாண்டி பிரிவு வி.கே.வி.நகரை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து, அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மகன், மகள் உள்பட 4 பேருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், முதியவரின் உடல்நிலை நேற்று முதலே மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளது.