August 14, 2020
தண்டோரா குழு
கோவை கிருஷ்ணா நகர் சொக்க முத்து விதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (56 வயது).இவருக்கு கடந்த பத்து நாளுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணமடைந்தது என்று சொல்லி மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே வீசிங் வந்துள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இ எஸ் ஐ மருத்துவமனைக்கு வந்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்துக்கு மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளனர். இதற்கிடையே அவர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்றுள்ளார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.இதுகுறித்து அவரது மகன் ரித்திஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில்,கிருஷ்ணவேணிக்கு கொரோனோ நோய்த்தொற்று குணம் ஆகாமலே குணமடைந்து விட்டதாக சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தார். அவருக்கு சர்க்கரை நோயும் உள்ளதாகவும், இதற்கிடையே வீசிங் பிரச்சனையும் இரவு ஏற்பட்டதாக கூறினார். சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்ற போது இ எஸ் ஐ மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச்செலுங்கள் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றபோது மருத்துவர்கள் அனுமதிக்காததால் நீண்ட நேரம் நள்ளிரவு நேரத்தில் மாநகர் முழுவதும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார். பின்னர் மீண்டும் ஈ எஸ் ஐ மருத்துவமனையில் சேர்க்க போலிஸ் வரை அனுகிய பின்னர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்த்துள்ளனர்.இது போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் அலைகழிக்கப்படுவதாலே தேவையற்ற அசம்பாவிதம் ஏற்படுகிறது என்றார்.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ.மருத்துவமனையின் முதல்வர் நிர்மலாவிடம் நாம் கேட்டபோது, இதனை முற்றிலும் மறுத்துள்ளார். இது போன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்றார்.