June 1, 2020
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பழைய கட்டிடத்தின் முதல்தளத்திலுள்ள அலுவலகங்கள் மூடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று புதிதாக கடந்த 29 நாட்களாக யாருக்கும் பாதிக்கப்படவில்லை.இந்நிலையில் சென்னை மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் மும்பையிலிருந்து வந்த ஆறு பேர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தின் முதல் மாடியிலுள்ள சிறைத்துறை நன்னடத்தை அலுவலக அதிகாரி ஒருவர் சென்னையிலிருந்து நான்கு நாட்களுக்கு முன்பு சாலை வழியாக கோவைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பழைய கட்டிடத்தின் முதல்மாடியில் இயங்கும் நூகர்வோர் குறைதீர் நீதிமன்றம், நில அளவை பண்டக அறை, மாவட்ட ஊராட்சி அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகங்கள், மண்டல இணை இயக்குனர் புள்ளியியல் அலுவலகம், மாவட்ட சிறை நன்னடத்தை அலுவலகம் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என நேற்று அறிவுறுத்தப்பட்டதையடுத்து இன்று மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.