August 29, 2020
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் (35) என்பவரை பண மோசடி வழக்கில், கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும்,இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வர்த்தகம் செய்து வந்துள்ளார். இவரை, தொடர்பு கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜவுளி வர்த்தகம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கித் தருவதாக,ஹரிஹரசுதன் உறுதியளித்ததாகவும், இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.பின், பணத்தை பெற்று கொண்ட ஹரிஹரசுதன், நீண்ட நாட்கள் ஆகியும் ஜவுளிப் பொருட்களைஅனுப்பமால் இருத்ததாகவும்,இதுகுறித்து அந்த நபர் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதால் பொருட்களை, தற்போது வழங்க முடியாது, என தெரிவித்துள்ளார்.
தொடர் தாமதத்தால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஹரிஹரசுதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று கோவை வந்த கர்நாடகா போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, காசோலை மோசடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,அவரை கைது செய்து கர்நாடகா அழைத்து சென்றனர்.