March 21, 2026
தண்டோரா குழு
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் சங்கம் (TAMPOS) நடத்திய 3-வது மாநாடு, கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது.
புற்றுநோய் சிகிச்சையில் உலகளவில் மேற்கொள்ளப்படும் புதிய மருத்துவ முறைகள் மற்றும் நவீன ஆராய்ச்சிகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.குறிப்பாக இந்த ஆண்டு மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக கீழ்க்காணும் நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் (Immunotherapy) அமைந்தன:
•CAR T-cell சிகிச்சை: இந்தச் சிகிச்சைக்கு நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பக்கவிளைவுகளைக் கையாளுதல் குறித்த விரிவான அமர்வுகள் நடைபெற்றன.
•BiTEs சிகிச்சை: நிணநீர் (Lymphoma) மற்றும் ரத்தப் புற்றுநோய் (Myeloma) சிகிச்சையில் இதன் பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
•துல்லிய மருத்துவம் (Precision Medicine): கட்டிகளைக் கண்டறிய உதவும் அதிநவீன மரபணுச் சோதனை முடிவுகளைப் புரிந்துகொள்வது குறித்த சிறப்புப் வகுப்பு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த சீனியர் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பெருங்குடல், மார்பகம், நுரையீரல், தலை மற்றும் கழுத்து போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்தும், ரத்தப் புற்றுநோய் தொடர்பான புதிய சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசித்தனர்.
மருத்துவ மாணவர்களின் திறனை ஊக்குவிக்க ‘டாம்போஸ் தங்கப் பதக்கத் தேர்வு’ (TAMPOS Gold Medal Exam) மற்றும் வினா-விடைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், உள்ளூர் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, மார்ச் 21 அன்று “புரோஸ்டேட் புற்றுநோய்க்கான கதிரியக்கச் சிகிச்சை” குறித்த சிறப்பு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 2040-ஆம் ஆண்டிற்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், நவீன கதிரியக்கத் தொழில்நுட்பங்களை மருத்துவர்கள் கையாள்வதற்கு இந்தப் பயிற்சி உதவியாக அமைந்தது.
டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், கேஎம்சிஹெச் தமது உரையில்,
இத்தகைய மதிப்புமிக்க மாநாட்டை நடத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும், இது மருத்துவர்களிடையே புதிய அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
டாக்டர் அருண் என். பழனிசாமி (நிர்வாக இயக்குநர், கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து விளக்கினார். நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகளுக்குத் துல்லியமான மற்றும் நம்பிக்கையான சிகிச்சை அளிக்க இந்தப் பயிற்சி உதவும் என்றார்.
இந்த மாநாட்டை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் மருத்துவர்கள் Dr.விக்னேஷ் கந்த குமார், Dr.ராம் அபினவ் கண்ணன், Dr.ராம் குமார் மும்மூர்த்தி, Dr. சுப்பிரமணியம்,Dr.ஆனந்த் நாராயணன், Dr.ரூமேஷ் சந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னின்று நடத்தினர்.