September 27, 2026
தண்டோரா குழு
இதய ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3206 மற்றும் எஸ்பிடி மருத்துவமனை இணைந்து நடத்திய ‘பல்ஸ் ஹார்ட் மாரத்தான் 2026’ கோவை ராம்நகரில் தொடங்கி நேரு விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
“உங்கள் இதயம் உங்களை நேசிக்கிறது; நீங்களும் அதை நேசியுங்கள்” என்ற விழிப்புணர்வு கருத்துடன் நடைபெற்ற 5 கி.மீ. மாரத்தானில், 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இளைஞர்கள் அதிகளவில் உடற்பயிற்சியில் ஈடுபடுதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல் மற்றும் நோய்த்தடுப்பை வாழ்க்கை முறையாக மாற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் நாடித்துடிப்பு மாற்றங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3206 ஆளுநர் ஆர்.எஸ். மாருதி, மாரத்தான் தலைவர் ரோட்டேரியன் குர்பிரீத் சிங், இணைத் தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுப்புராஜா, முதன்மை மன்றத் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.