August 28, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களை கடைசி கட்டத்த்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ எஸ் ஐ மருத்துவமனையை தவிர்த்து 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலை மோசமடையும்போது அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உயிருக்கும் நிலை காணப்படுகிறது.இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிசை பலனின்றி உயிரிழப்பவர்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர்.இதுபோல கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறும்போது,
கோவை அரசு மருத்துவமனைக்கு இதுவரை 170 க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப் படுள்ளதாகவும்,இதில் 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கையால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.