June 4, 2020
தண்டோரா குழு
கோவையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் வந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம்(32) என்பவர் தனது நண்பர்களான ராஜா மற்றும் சூரிய ராஜ் ஆகியோர் உதவியுடன் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது, தெரியவந்தது.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுனர் செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா சூரியராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.