July 29, 2020
தண்டோரா குழு
கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை துடியலூர் போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த டிரைவர் காலனி பகுதியில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து விறபனை செய்வதாக துடியலூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு அங்கு சென்ற துடியலூர் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் டிரைவர் காலனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனர்.
சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டுபிடித்தனர். வீட்டில் குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துதது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த துடியலூர் போலீசார் இது தொடர்ந்து குட்காவை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.