August 25, 2020
தண்டோரா குழு
கோவையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த ஆண்டு மொத்தம் 621 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை மொத்தமாக 362 விபத்து வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 42 சதவீதம் குறைவு. கடந்தாண்டு சாலை விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு ஆக்ஸ்ட் 23ம் தேதி வரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.இது கடந்தாண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைவு.
மேலும், இந்தாண்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 4 லட்சத்து 48 ஆயிரத்து 520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 162 சதவீதம் அதிகம்.அதேபோல்,மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 89 ஆயிரத்து 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 190 சதவீதம் அதிகம் ஆகும்.
இவ்வாறு சுமித்சரண் கூறினார்.