July 7, 2020
தண்டோரா குழு
கோவையில் உள்ள 5 மண்டலங்களிலும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி ஆய்வில், விதிமுறைகளை மீறிய கடைகளிலிருந்து 56,550 ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலரான ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் உத்தரவின்படி,. மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் தினசரி கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
அதன்படி, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பறக்கும் படை குழுவினர்கள் மூலம் இன்று நடத்தப்பட்ட ஆய்வில்,மேற்கு மண்டலத்தில் 177 கடைகளில் இருந்து ரூ17,500/-ம், கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 கடைகளில் ரூ.3,700/-ம், மத்திய மண்டலத்தில் விதிமுறை மீறி 55 கடைகளில் ரூ.6,100/-ம், விதிமுறைகளை மீறியதாக வடக்கு மண்டலத்தில் 141 கடைகளில் ரூ.14,200/-ம், தெற்கு மண்டலத்தில் 252 கடைகளில் ரூ.15,050/-ம் அபராதத்தொகையினை வசூலித்துள்ளனர்.
மேலும் முகக்கவசங்கள் அணியாமலும், வருகைப் பதிவேடு முறையாக பேணப்படாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியினை பின்பற்றாமலும் இயங்கிய 665 கடைகளிலிருந்து மொத்தம் 56 ஆயிரத்து 550 ரூபாய் அபராத்தொகை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.