September 9, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தந்ததுக்காக வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு யானை. அதற்கு முன்பு வெடிமருந்தை சாப்பிட்டு வாயில் காயத்துடன் இறந்து போனது கேரளாவில் ஒரு யானை. அதேபோல கோவையில், உடல் காயமடைந்து எழுந்திரிக்க முடியாமல் இறந்து போனது.
அந்தவகையில் தற்போது அவுட்டுக்காய் என்னும் வெடியை சாப்பிட்டு நாக்கு சேதமாகி கடந்த ஒரு மாத காலமாக வலியுடன் சுற்றி வந்தது ஒரு மக்னா யானை. இதற்கு மருந்து அளித்து காப்பாற்ற தமிழக , கேரள வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி பலனளிக்காததால் நேற்று கைவிரித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் சோலையூர் அருகிலுள்ள மரப்பாலம் பகுதியில் இந்த மக்னா யானை உயிரிழந்து கிடந்தது.