November 7, 2017
தண்டோரா குழு
கோவையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வழக்கறிஞர் ராஜரத்தினத்தை கைது செய்து சித்திரவதை செய்ததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாறன்குளத்தைசேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம்,கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ,வீட்டிலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
ராதாபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர், அங்கு வைத்து கட்டிப்போடப்பட்டு, வாயில் செருப்பை கவ்வக்கொடுத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பல மணி நேரம் இப்படித் தாக்கப்பட்ட அவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியால் நீதிமன்றத்தின் பொறுப்பில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர்பான வழக்குகளை இவர் கவனித்து வந்தார்.கடந்த மூன்றாம் தேதியன்று, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவுசெய்வதாக அவர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர் யார் மீது அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தாரோ, அந்த காவலர்களே தன்னைத் தாக்கியதாக ராஜரத்தினம் தெரிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து , நீதிமன்ற வாயிலில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.