January 11, 2026
தண்டோரா குழு
கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் இன்று தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.
இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.
அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார்.
இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.
தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், .
இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.