June 8, 2020
தண்டோரா குழு
மத்திய அரசின் ரயில்வே தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்தியளவில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு உடையணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய அளவில் ரயில்வே துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை குட்செட் சாலையிலுள்ள ரயில்வே பணிமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், கொரொனாவை காரணம் காட்டி ஒரு மாதத்திற்கு 5 நாள் வீதம் ஜனவரி 2020 முதல் ஜீன் 2021 வரை 18 மாதத்திற்கு 3 மாதம் ஊதியத்தை பிடிக்க கூடாது என வலியுறுத்தினர். மேலும் 55, 000 முதல் 4 லட்ச ரூபாய் வரை பயணப்படி இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் ஊதிய உயர்வு, இரவு பணிப்படி , வேலை நேரத்திற்கு மேல், அதிகம் வேலை செய்வதற்கான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரி கடந்த ஜீன் 1 முதல் ஜீன் 8 வரை விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்து இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.