September 18, 2020
தண்டோரா குழு
கோவை அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் வலம்வந்த காட்டு ஆண் யானை வியாழக்கிழமை மாலை உயிரிழந்தது.நடப்பாண்டில் கோவை வனப்பகுதியில் 20வது காட்டு யானை உயிரிழந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை காலில் படுகாயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் இந்த காட்டு யானைக்கு கும்கி யானைகள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த வனப்பகுதிக்கு 2 கும்கி யானைகள், மருத்துவர்கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து அந்த யானையை சமவெளிக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வனப்பகுதியில் அந்த காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கோவை வனப்பகுதியில் இந்த ஆண்டில் 20வது யானைகள் உயிரிழந்துள்ளது.
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில்,
நெல்லித்துறை காப்புக் காட்டில் நேற்று மற்றும் இன்று தொடர்ந்து லேசான மழை பெய்ததால் யானை சேறான பகுதியில் வழுக்கி விழுந்ததாகவும், வழுக்கி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும்,மேலும் காலில் இருந்த காயம் காரணமாக எழுந்திருக்க முடியவில்லை என்று அங்கு உள்ள வன அலுவலகர்கள் தகவல் அளித்தனர். யானைக்கு காலில் ஏற்பட்ட காயம் தவிர அடி வயிற்றிலும் தோள்பட்டையிலும் வேறு ஒரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானை ஏற்கனவே இரண்டு இடங்களில் தந்தத்தினால் குத்தப்பட்டகாயங்களும் இருந்தன. வனதுறை முயற்சி செய்தும் பலன் இன்றி யானை இறந்து விட்டது பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையாக தெரியும் என தெரிவித்தனர்.