September 8, 2020
தண்டோரா குழு
கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் முக கவசமின்றி செல்வோர்க்கு போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் 100ரூபாய் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்து உள்ளார். வாயையும்,மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்கள்,பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு, பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து கோவையில்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த காந்திபுரம் பகுதியில் முக கவசம் அணியாமல் நடந்து செல்வோர்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் இன்றி செல்வோரை காட்டூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் தனி நபர்க்கு 100ரூபாய் என்று அபராதம் விதித்தனர்.மேலும் முக கவசமின்றி வருவோருக்கு போலீசார் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதே போல் கோவையின் பல்வேறு பகுதியில் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.