June 13, 2020
தண்டோரா குழு
கோவையில்ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், கொரோனா இல்லாத மாவட்டமாக 20 நாட்களுக்கும் மேலாக கோவை இருந்து வந்தது. ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கோவை வருபவர்களால், கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதுாக்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, கோவை, உடையாம்பாளையத்தை சேர்ந்த 69 வயது முதியவர், ரத்தினபுரியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, வெள்ளக்கிணர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், திருப்பூர் மாவட்டம், தெக்கலுாரை சேர்ந்த எய்ட்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட 48 வயது ஆண், காரமடையை சேர்ந்த 30 வயது பெண், கோவை கணபதியை சேர்ந்த 23 வயது பெண், விருது நகர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண், திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த 24 வயது பெண் ஆகியோருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோக, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சிறுநீரகப்பை வெளியே வந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார். அதில், குழந்தை வயிற்றிலேயே இறந்தது, தெரியவந்ததை அடுத்து உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுபோக, கோவைப்புதுார் சிறப்பு காவல்படையில் பணியாற்றி வரும் காவலரின் மனைவியுடன் தொடர்புடைய, பெண்ணின் தாய்,48. மற்றும் அருகில் வசிக்கும் 25 வயது பெண்ணுக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுபோக, விமானம் மூலம் கோவை வந்த, பிற மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.