May 18, 2020
தண்டோரா குழு
மணிப்பூர் பெண்களை சீனா பெண் (கொரோனா அண்ட் கோ) என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் மேகாலாயா, மணிப்பூர் , அஸ்ஸாம் உட்பட பல்வேறு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக சாய்பாபா காலனி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் மணிப்பூர், மேகாலாயா மாநிலங்களை சேர்ந்த பெண்களிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.
வடமாநில பெண்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் சீனாவை சேர்த்தவர்கள் என நினைத்து கொண்டு அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன் தள்ளி விட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வடமாநில பெண்கள் சாய்பாபா காவல் துறையில் புகார் அளித்தனர். அப்போது உங்களால்தான் கொரோனா பரவுகின்றது என கூறி “கொரோனா கோ” என பேசுவதாகவும்,தகாத வார்த்தையில் திட்டுவதுடன் தள்ளிவிடுவதாகவும் வடமாநில பெண்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும் தகராறு செய்த வாலிபரின் வீடியோவையும் வடமாநில பெண்கள் சாய்பாபா காலனி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில்,மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஜென்னி(21),மரியா(23) ஆகிய இளம்பெண்கள் இருவரை மறித்து சீனா நாட்டை சேர்ந்தவர்களா எனக்கூறி தகராறில் ஈடுபட்டதாக போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விக்னேஷ் (26) என்பவரை சாய்பாபா காலனி காவல்துறையினர் கைது செய்தனர்.
.