July 3, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடிசியா உட்பட பல்வேறு இடங்களில் 4,655 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் 13 சோதனை சாவடிகளில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் கொரொனா அறிகுறி இருக்கின்றதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் 5000 காய்ச்சல் முகாம் நடத்தப்பட இருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் 5000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.
அதேபோல, கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகின்றது.கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கின்றது. மக்களிடம் ஆரம்பத்தில் இருந்த ஒத்துழைப்பு, பயம் குறைந்து போய் இருக்கின்றது சந்தேகத்திற்கு இடமான வகையில் காய்ச்சலுடன் இருந்தால் உடனடியாக பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், கோவையில் ஏன் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என கூறிய அமைச்சர் வேலுமணி, அந்தளவிற்கு கோவை மாவட்டம் இல்லை எனவும் பள்ளியில் படிக்கும் என் மகளுக்கு திருமணம் என்பதால் கோவையில் லாக்டவுண் போடவில்லை என்று தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி அரசியல் செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு கொரோனா மீதான பயம் குறைந்து போய் இருக்கின்றது எனவும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், முகக்கவசம் போடாதவர்களிடம் பேசாதீர்கள் எனவும் அறிவுறுத்தினார்.கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சித்தா மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும் எனவும் அதற்கான சித்த மருத்துவ கிட்டுகள் கோவையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.அதேபோல, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி தவிர பிற பொருட்ளுக்கு பணம் வாங்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு, மாவட்ட அளவில் இது குறித்து முடிவெடுக்க முடியாது எனவும் இது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு விரைவாக எடுத்துச் செல்லப்படும் எனவும், மக்கள் சிரமப்படும் பட்சத்தில் அரசு நிச்சயம் அதனை பரிசீலிக்கும் எனவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதமும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதன் பின்னர் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 படுக்கை வசதிகள் கொரோனா வார்டை அமைச்சர் பார்வையிட்டார்.