October 2, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்த நிலையில், வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டால், தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மற்றும் வாலிபர் ஒருவர், அரசு மருத்துவமனையில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றை தள்ளிக் கொண்டு சென்றதை பார்த்துள்ளனர்.அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார்,அவர்களை விசாரிக்க அழைத்த போது,இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இதையடுத்து, அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஒருவரின் பெயர் குகன் (22) பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இவர், எல்.ஐ.சி பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த இரு சக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.மற்றொருவரான சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.