May 19, 2020
தண்டோரா குழு
மகாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்து கோவை திரும்பிய பெண் பயிற்சி மருத்துவரை அவரது குடியிருப்பு பகுதியில் சக குடியிருப்புவாசிகள் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள துலாக் வெங்கடசாமி வீதியில் வசித்து வருபவர்கள் நடராஜன் (54) மற்றும் பத்மபிரியா (45) தம்பதியினர். உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் வாசுகி (24) கோவை நவ கரையில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் படித்துவிட்டு, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தனது சொந்த ஊரான கோவை திரும்ப முடிவெடுத்த வாசுகி பூனேவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வெளியானதையடுத்து கார் மூலம் கோவை திரும்பினார்.
கோவை வந்த இயற்கை மருத்துவர் வாசுகி கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனையிலும் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இயற்கை மருத்துவர் வாசுகி பீளமேட்டில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முயன்றபோது, சக குடியிருப்புவாசிகள் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் அவரை அனுமதிக்க மறுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அப்பகுதி வாசிகளை சமாதானம் செய்தனர்.
இதனை அடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்த மருத்துவர் வாசுகி, உதவிக்காக அவரது தம்பியை மட்டும் உடன் தங்க வைத்துக் கொண்டு, பெற்றோர் இருவரையும் அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.