September 25, 2020
தண்டோரா குழு
கோவையில் புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில், கோவை மாநகரம், மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி மற்றும் துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில்,முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்து அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது.
இதே போல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாகவும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐ.என்.டி.யூ.சி. எச்.எம்.எஸ்.சி.ஐ.டி.யூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் .