June 15, 2020
தண்டோரா குழு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபரைதுடியலூர் போலிசார் கைது செய்தனர்.
கோவையில் பிரபல பீடி கம்பெனியான 10ம் நம்பர் பீடி பெயரில் போலி பீடி கட்டுகள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து,நேற்று மாலை கவுண்டம்பாளையம் பகுதியில் பீடி கம்பெனி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்த போது அங்கு போலி பீடி கட்டுகளை விற்பனை செய்ய வந்த நபரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து அவரிடம் இருந்த போலி பீடி கட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
பீடி கம்பெனியின் புகாரின் அடிப்படையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தென்காசியை சேர்ந்த பிச்சையா என்கின்ற சூர்யா என்பதும் அங்கு கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்ததால் அங்கிருந்து பிரபல கம்பெனி பெயரில் தயாரிக்கப்படும் போலி பீடி கட்டுக்களை கொண்டு வந்து கோவையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரை கைது செய்த துடியலூர் போலீஸார் அவரிடம் இருந்து 100 போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.