May 12, 2020
தண்டோரா குழு
கோவையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்து பாலமலை செல்லும் பகுதியில் நாயக்கன்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் இன்று காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார்.அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு அவர்தகவல்தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.
முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட அந்த இளைஞரின் உடலை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.மேலும் உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கலாம் என காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நீடித்து வரும் நிலையில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.