August 4, 2020
தண்டோரா குழு
கோவையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், குறிப்பிட்ட யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் பாஜக இளைஞரணி சார்பில் வேல் பூஜை நடத்தப்பட்டது.
கந்த சஷ்டிக் கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் சேனலை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறிப்பிட்ட யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகரத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கந்தன் புகழைப் பாடி போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை ராம்நகரில் மாவட்ட பாஜக பொதுச்செயலாளரும், கந்தன் படையின் கோவை நகர பொறுப்பாளருமான ரமேஷ் குமார் தலைமையில் பாஜக இளைஞரணி சார்பில் வேல் பூஜையானது நடத்தப்பட்டது. அப்போது முருகன் புகழை பரப்பும் விதமாக பாடல்கள் பாடியும், ஆட்டம் ஆடியும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கு எதிராக பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல காவடி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பக்தியை வெளிக்காட்டும் விதமான நடனங்களை போராட்டத்தின்போது அரங்கேற்றி தங்கள் நிலையை பாஜகவினர் வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.