August 26, 2020
தண்டோரா குழு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோவை வந்த பயணிகளிடம் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தை கடத்தி வந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகள் சோதனை செய்யப்பட்டனர்.அப்போது,கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட கோவை மத்திய வருவாய் புலனாய்வின் துணை இயக்குனர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள், பயணிகளில் சந்தேகத்திற்கிடமான தம்பதி இருவரிடம் விசாரணை நடத்தினர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 46 மற்றும் 33 வயதுடைய தம்பதியினர்,தங்களது உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 6 பாக்கெட்டுகளில் இருந்த 2 ஆயிரத்து 610 கிராம் எடையுள்ள ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 812 மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.விமான நிலைய சோதனையான மெட்டல் டிடக்டர், எக்ஸ்ட்ரே ஆகியவை மூலம் கண்டறியப்படாத வகையில், தங்கத்தை உருக்கி பேப்பரில் பேஸ்ட் வகையில் இட்டு, அதனை உள்ளாடைகளில் தைத்து எடுத்து வரப்பட்டது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. இதுபோன்ற பேஸ்ட் வகையில் கோவை விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி வந்தது இதுவே முதல் முறையாகும் எனக்கூறும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அதை பல்வேறு கட்ட முறைகளில் தங்கமாக பிரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
தங்கத்தை கடத்தி வந்த இந்த தம்பதியினர் , கொரோனா விதிமுறை அடிப்படையில் தனிமைப் படுத்தப்பட்டு, 14 நாட்கள் முடித்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.முன்னதாக, கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு சென்ற இந்த தம்பதியினர், கொரோனா காரணமாக திரும்பி வர முடியாமல், கையிலிருந்த பணத்தை முழுமையாக செலவு செய்து, பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அப்போது, சிலர், இந்த தங்கத்தை எடுத்து சென்றால், பணமும் தருவதாகவும், இந்தியா திரும்பும் வரை தங்க ஏற்பாடு செய்வதாக சொல்லியதை அடுத்து, வேறு வழியில்லாமல் தங்கத்தை கடத்தி வர இந்த தம்பதியினர் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
மேலும்,வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் என்பதால் சோதனை இருக்காது என்று கடத்தல் செய்ய தம்பதியை ஒப்புக்கொள்ள வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட தம்பதியினர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், விவசாயம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.