May 9, 2020
தண்டோரா குழு
தமிழக அரசு தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் மேளதாளங்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.இதனிடையே மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தரப்பினருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள கோவில் வளாகம் ஒன்றில் அமர்ந்து நாதஸ்வரம் வாசித்தும் தவில் இசைத்தும், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தினர் ஆகியோருக்கு வழங்குவது போன்று தங்களைப் போன்ற இசைக் கலைஞர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற சமயங்களில் மட்டுமே தங்களுக்கு வருமானம் கிடைப்பதாகவும் கடந்த இரு மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லாததால் கடும் சிரமத்திற்கு தாங்கள் ஆளாகி உள்ளதாகவும் கூறிய இசைக்கலைஞர்கள்,அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.