September 9, 2020
தண்டோரா குழு
தேசிய கண்தான இரு வார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு விழாவில் கண் தானம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்த தேசிய கண் தான இருவார விழா மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 84 லட்சம் பேருக்கு கருவிழி குறைபாட்டினால் பார்வை இழப்பு குறைந்தது ஒரு கண்ணில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 30,000 கண் தான அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது.கண் தான அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இருந்த போதிலும், நம்மால் கண் தான அறுவை சிகிச்சை தேவையான அளவிற்கு செய்ய முடியவில்லை.அதற்கு முக்கிய காரணம், மக்கள், அதிகம் கண் தானம் செய்யாததினால், இந்த அறுவை சிகிச்சை நிறைய மக்களுக்கு செய்ய முடியவில்லை.
லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்டம் இணைந்து இந்த கண்தான விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் செப்டம்பர் 8 அன்று கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெபினார் மூலம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கும் மற்றும ;அனைத்து சமூக சேவை அமைப்புக்கும் எடுத்து சென்றது. சுமார் 300 பேர் இந்த வெபினார்-ல் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த விழிப்புணர்வு வெபினார் துவக்க விழாவில் கோயம்புத்தூர் அரிமா மாவட்ட ஆளுநர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி ராமலிங்கம் வரவேற்புரையில்,
லோட்டஸ் கண் மருத்துவமனை அனைத்து சேவை திட்டங்களுக்காக அரிமா சங்கங்களுடன் சேர்ந்து அனைத்து தர மக்களுக்கும் சேவை செய்வதற்கு உறுதுணையாக இருக்கிறது.கண்களில் ஏற்படும் காயங்கள், பிறவி கண் பார்வை குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று நோய், ரசாயன தீக்காயங்கள் போன்றவை கண்பார்வை இழப்பு ஏற்பட காரணமாகின்றன.
மேலும், கண் தானம் பற்றி எடுத்துரைத்த போது, ஆண், பெண் இருபாலரும் எந்த வயதினராக இருந்தாலும் கண் தானம் செய்யலாம். கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் உட்பட பலரும் கண் தானம் செய்யலாம். இறந்து 4 – 6 மணி நேரத்திற்குள் கண் தானம் செய்தல் வேண்டும். கண் தானம் செய்ய விரும்புபவர்கள் அதைப் பற்றி தமது குடும்பத்தாரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம் என்றார்.
அரிமா மாவட்ட ஆளுநர் தர்மராஜ் பேசுகையில்,
தற்பொழுது சுமார் 500 கண் தானம் அறுவை சிகிச்சைக்கு, அரிமா சங்கம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகிறது. மேலும், அரிமா சங்கம், இந்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்வதற்கு மிக்க உறுதுணையாக இருக்குமென்று உறுதியளித்தார். இந்தத் துவக்க விழாவில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி மாவட்ட அரிமா ஆளுநர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் கண் தானம் செய்வதற்கான இணைப்பு படிவத்தை பூர்த்தி செய்து கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.