September 7, 2025
தண்டோரா குழு
“கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” என்ற கருப்பொருளில், கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் (ஐபிசிஎல்) 2.0 மூன்று நாள் போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட் காஷ்மீர், உத்தரப்பிரதேசம், புது தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரம், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் அவர்கள் தங்கள் மன உறுதி, உற்சாகம் மற்றும் கிரிக்கெட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினர்.
போட்டியை வெற்றிகரமாக நடத்த கோவை காஸ்மோபாலிட்டன், ஸ்மார்ட்சிட்டி, யுனிக், எசிகாஸ், கற்பகம் உயர்கல்வி அகாடமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் முக்கிய பங்காற்றின. போட்டி நிகழ்வுத் தலைவராக ஜெய் கிஷோர், செயலாளராக ஸ்ரீ அஸ்வந்த், ஒருங்கிணைப்பாளராக மிதுன், பொருளாளராக ஜனனி சேவைபுரிந்தனர். அவர்களை நிர்வாகிகள் வெங்கடேஷ், ஸ்ரீவர்ஷன் ஆகியோர் வழிநடத்தினர்.
நிறைவு விழாவில் கோவை ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்,தலைமை விருந்தினராக பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார். வீரர்களின் தைரியத்தை பாராட்டினார். கௌரவ விருந்தினராக ஐஎஃப்சிஆர் தலைவர் ஸ்ரீனிவாசன் பங்கேற்று, உரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
“விளையாட்டு என்பது எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் மொழி. ஐபிசிஎல் ஒரு விளையாட்டு மட்டுமல்லாமல், அங்கீகாரம், கண்ணியம், வாய்ப்புகளுக்கான கதவுகள். அரசு ஒதுக்கீடு, உதவித்தொகை, வேலைவாய்ப்பு போன்றவற்றை பெறுவதற்கான பாதையை இத்தகைய நிகழ்வுகள் அமைக்கின்றன” என்றார்.
நிகழ்வுகளுக்கு டிரைடெக் ஸ்பெஷாலிட்டி இங்க்ரீடியண்ட்ஸ் தலைமை ஸ்பான்சராகவும்,வேவிக் சொல்யூசன்ஸ் , ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை இணை ஸ்பான்சராகவும் இருந்தன.தாய் கிரீன் பவர், டெக் 7, புரோசோன், போலார் பியர், ஜெய்சன் சுற்றுலா, ஸ்ரீ குமரன் தங்கம் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சர்களாக செயல்பட்டன.
ஆர்த்தோ ஒன் பிளாட்டினம் ஆதரவாளராகவும், மெஷின்ஸ் எனர்ஜி சில்வர் ஆதரவாளராகவும், பிக்சல் பாயல் பிராண்டிங் கூட்டாளராகவும் இணைந்தன.
“இந்தியாவில் கிரிக்கெட் எப்போதும் ஒரு விளையாட்டைவிட அதிகம். மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு இந்த லீக் அவர்கள் விளையாடவும், அங்கீகரிக்கப்படவும் ஒரு அரிய வாய்ப்பு” என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அரை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிரீன் அணியை எதிர்த்து புது தில்லி டைனமிக்ஸ் அணி விளையாடியது. இதில் சென்னை சூப்பர் கிரீன் அணி 176/8 என்ற ரன் கணக்கில் வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய புது தில்லி டைனமிக்ஸ் அணி 121/10 என்ற ரன் கணக்கில் தோல்வியடைந்தது.சென்னை சூப்பர் கிரீன்ஸ் அணியின் வீரர் சாலா ஜென்டிபை 42 ரன் எடுத்தார். ரஞ்சித் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
இறுதிப்போட்டியில் மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா தண்டர் வாரியார் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா தண்டர் வாரியார் அணி 94/8 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 95/4 ரன் எடுத்தது வெற்றி பெற்றது.ஸ்கோர் – மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணியின் வீரர் சன்மார்கர் 57 ரன்கள் எடுத்தார். குணசேகரன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சிறந்த பேட்ஸ்மேனாக மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ், அணியின் வீரர் சன்மேக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த பந்து வீச்சாளராக கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியின் வீரர் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் நாயகனாக சென்னை சூப்பர் கிரீன்ஸ் அணியின் வீரர் ரமேஷ் நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.