July 9, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சிறப்பு கொரோனா காய்ச்சல் பரிசோதனை முகாம் தொடங்கி உள்ளது. அதில் ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 20 லட்சம் பேர் இங்கு வசித்து வரும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது வரை 927 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 308 பேர் குணம் அடைந்து உள்ளன. 3 பேர் இறந்துள்ளனர்.
இதனிடையே பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் 100 வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா காய்ச்சல் முகாம் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. தினந்தோறும் 100 முகாம்கள் வீதம் 5 ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இந்த முகாமில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மட்டும் இன்றி அனைத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.