June 6, 2020
தண்டோரா குழு
வரும் திங்கட் கிழமை முதல் கோவையில் கண்காணிப்பினை தீவிரபடுத்த இருக்கின்றோம் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடை வெளியை கடை பிடிக்க வேண்டும். கோவையில் சமீபகாலமாக முக கவசம் அணிவது இல்லை என்பதையும், சமூக இடைவெளி இல்லை என்பதையும் உணர்கின்றோம். கோவை விமான நிலையத்திற்கு இது வரை 54 விமானங்கள் வந்துள்ளது. இதில் வந்தவர்கள் 43 பேருக்கு கொரொனா இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மீண்டும் கொரொனா பரவவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம். வரும் திங்கட் கிழமை முதல் கோவையில் கண்காணிப்பினை தீவிரபடுத்த இருக்கின்றோம்.திங்கட் கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் ,
சமூக இடைவெளி இன்றி இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் இருக்கின்றதோ அந்த நிறுவன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் சுமார் 4000 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போது பயமில்லாத சூழல் இருந்தது. கொரொனா வைரஸ் தன்மை சமீபத்தில் மாறியுள்ளது. இதை மக்கள் உணர வேண்டும்.பொது மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது, பொது வெளியில் வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளது.கோவையில் இது வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் இதில் 3 பேருக்கு சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத் ஆகியோர் உடன் இருந்தனர்.