June 6, 2020
தண்டோரா குழு
கோவையில் இருசக்கர வாகனம் வாங்கி தர தந்தை மறுத்ததால் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோமையனூர் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூத்த மகன் வசந்தகுமார்(25) சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது தந்தையிடம் வெகு நாட்களாக புதிய இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கி தர சொல்லி வலியுறுத்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி மீண்டும் தன் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தர சொன்னபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, செல்வராஜ் அவரது மனைவி மற்றும் இளைய மகனுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வசந்தகுமார் அவரது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர்.
இதனையடுத்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த தடாகம் போலீசார், வசந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தந்தை இரு சக்கர வாகனம் வாங்கி தர மறுத்ததால் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.