November 10, 2017
தண்டோரா குழு
கோவையில் காலில் காயத்துடன் நடக்க முடியாமல் போராடி வரும் காட்டு யானையை கண்ட கிராம மக்கள் கண்கலங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே கொம்டனூர் என்னும் மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் ஆண் யானை ஒன்று நடக்க முடியாத நிலையில் போராடி வருகிறது.கொம்டனூர், பனப்பள்ளி, கிரமங்களை சுற்றிவந்த யானை கூட்டத்தை சேர்ந்த இந்த யானை தற்போது தனியாக சுற்றி வருகிறது.காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த யானை நடக்க முடியாமல் கூட்டத்தை விட்டு பிரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது யானை நடக்க முடியாமல் அந்த கிராமத்தையோ சுற்றி வருகிறது. யானையின் இத்தகைய நிலையை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர். மிகவும் சோர்வாக காணப்படும் இந்த யானைக்கு உடனடியாக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.