November 7, 2017
தண்டோரா குழு
கோவையில் கந்து வட்டி தொழில் செய்து வரும் உடையாம்பாளையம் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக மாநகர காவல் துணை ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.
கோவையைச் சேர்ந்த 5 பேர்,தாங்கள் வாங்கிய கடன் தொகையை விட பத்து மடங்கு அதிகமாக பணம் கட்டியபோதும், 10 நாட்களுக்கு ஐந்து சதவிகிதம் வட்டி வீதம் மாதம் 15 சதவிகிதம் வட்டி கட்டுவதாகவும், கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டிருக்கும் உடையாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுத்து தங்களது சொத்துகளை மீட்டுத்தரக்கோரி மாநகர காவல்துறை துணை ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.
பட்டணம் புதூர் பகுதியைச்சேர்நத மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரில் தான் பேனல் போர்டு தாயரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், உடையாம்பாளையத்தைச்சேர்ந்த நந்தகுமார், முருகானந்தம் , அவரது நண்பர் சுப்பிரமணி அவர்களிடம் 9 லட்சம் கடனாக கேட்டுள்ளார்.அவர்கள் இரண்டு லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு மீதி ஏழு லட்சத்தை கடந்த 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் கடனாக கொடுத்துள்ளனர்.
அதற்கு மணிகண்டனின் நண்பர் பெயரிலுள்ள 2.5 செண்ட் இடத்தை ஜாமீனாக வழங்கியுள்ளார். பத்து நாட்களுக்கு 9 லட்சத்திற்கு 45,000 ரூபாய் வட்டி என ஒரு மாதத்திற்கு 1,35,000 ரூபாயை முருகானந்தம் மூலம் பெற்று வந்துள்ளார்.
செப்டம்பர் 2012 ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் ஜீலை மாதம் வரை மொத்தம் 57 மாதங்களுக்கு 76,95,000 ரூபாய் இதுவரை அசல் இல்லாமல் கந்து வட்டியாக மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இவரது அலுவலகத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட ஒயர், ஸ்விட்சுகள்,பேனல்போர்டுகள்,டேபிள் சேர் போன்ற அனைத்து பொருட்களையும், 18 லட்சம் ரூபாய் தரச்சொல்லி வற்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்
மேலும் பூர்த்தி செய்யாத காசோலைகள், பிராமிசரி நோட் ,கீரின் சீட் எழுதாத கையெழுத்து போட்டது உட்பட அனைத்தையும் சுப்பிரமணியிடமிருந்து மீட்டுத்தரக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார்.
இதேபோல இராமநாதபுரம் பகுதியைச்சேர்ந்த விஜேந்திரபூபதி உடையாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் வாங்கிய 50,000 ரூபாய்க்கு 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2017 ஜீலை வரை 87 மாதங்களில் 6,52,500 வரை பணம் வாங்கியுள்ளார். இதனோடு கையொப்பமிட்ட வெற்று பத்திரங்கள் வாங்கிக்கொண்டதாகவும் கூறினார்.மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து 3,50,000 ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் சுப்பிரமணி மீது காவல்துறை ஆனையாளர் தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார்.
செளரிபாளையம் பகுதியைச்சேர்ந்த குருராசன் முதுகலை பட்டம் பெற்று பம்ப் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.தொழில் நிமித்தமாக 1,80,000 ரூபாயை கடனாக சுப்பிரமணியத்திடம் வாங்கியுள்ளார்.இதற்கு வட்டியாக 7,89,000 ரூபாய் வரை கட்டியுள்ளார்.இன்னும் 5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சுப்பிரமணி மீது புகார் தெரிவித்தார்.
கடன் வாங்கியவர்கள் மற்றும் அவருக்கு ஜாமீன் கொடுத்தவர்களின் சொத்துக்களை வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டும், காசோலைகளை வாங்கிக்கொண்டும், தங்களது சொத்துக்களை அபகரித்து,கொலை மிரட்டல் விடுக்கும் சுப்பிரமணி மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து தங்களது உடமைகளை மீட்டு,பாதுகாப்புபளிக்கக்கோரி மனு அளித்தனர்.
கந்து வட்டியால் நெல்லையில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதிற்கு பின்பு,கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தவுடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.