November 10, 2017
தண்டோரா குழு
கோவையில் கந்து வட்டி கேட்டு மிரட்டும் பெண்மணி குண்டர்களை வைத்து மிரட்டுவதாக பூபதி என்ற விவசாயி மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை இருகூர் பகுதியை சேர்ந்த விவசாயி பூபதி மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் இருகூர் பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து பத்து இலட்ச ரூபாய் பணம் வாங்கியதாகவும், ஏழரை இலட்ச ரூபாய் திரும்ப செலுத்திய நிலையில் இன்னும் 16 இலட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என கந்துவட்டி கேட்டு நிர்பந்திப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டை கைப்பற்றும் நோக்கில் குண்டர் வைத்து மிரட்டுவதாகவும், இதேபோல பலரிடமும் வீட்டு பத்திரங்களை பெற்று கந்துவட்டி கேட்டு நெருக்கடி அளித்து வருவதாகவும் கூறிய பூபதி, ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதேபோல கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 9 இலட்ச ரூபாய் கடனுக்கு 77 இலட்சம் கேட்டு மிரட்டுவதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜோதிமணி தனது பெயரிலும்,பினாமி பெயரிலும் எழுதி வாங்கிய பத்திரத்தையும் எடுத்து வந்திருந்தனர்.