May 19, 2020
தண்டோரா குழு
நான்காம் கால ஊரடங்கு நேரத்தில்
கோவையில் கடை வீதிகளில் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இருந்த போதும் நோய் தொற்றின் வீரியம் தமிழகம்,டெல்லி உட்பட சில மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை குறைக்க கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சென்னை தவிர சில மாவட்டங்களில் நோய் தொற்று குறைவாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது.இந்நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை மீறி செயல்பட்ட குளிர்சாதன வசதிகளுடனான கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் கடைகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் பண்டிகை, காலம் மற்றும் முகூர்த்த கால நேரம் ஆனதால் விதியை மீறி சில கடைகள் செயல்பட்டு வருகின்றன.கோவையின் முக்கிய பகுதிகளான பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி,காந்திபுரம் போன்ற பகுதிகளில் தற்போது பொதுமக்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மே 31 வரையில் மாநிலம் முழுவதுமே கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை, பொதுப் போக்குவரத்து கிடையாது, மக்கள் அதிகம் கூடுவதற்கும் அனுமதியில்லை என்ற உத்தரவு இருந்த போதிலும் தற்போது பண்டிகை மற்றும் முகூர்த்த கால நேரம் ஆதலால் சில பெரிய ஜவுளி நிறுவனங்களில் தடையை மீறி மறைமுகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் ,நோய் தொற்று பரவல் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு,நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.