August 18, 2020
தண்டோரா குழு
கோவையில் ஏற்பட்டு வரும் யானை தொடர்பான மரணங்கள் மற்றும் உடல்நலம் குன்றிய யானைகளின் விவரங்கள் பற்றிய அறிக்கையை தயார் செய்யுமாறு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.யுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் வனக்கோட்டத்தில் நடைபெற்று வரும் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு, வன உயிரினங்கள்-மனித மோதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்பான பணிகளை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் செய்தார். மேலும், யானைகளின் இறப்பு குறித்து சிறப்பு குழு மற்றும் உறுப்பினர்களுடன் காணொளி காட்சி மூலம் தற்போதைய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட வனப்பாதுகாவலர் அன்வர்தீன் IFS, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் IFS, மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமாரன், WWF உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,காணொளியில் குழுவின் தலைவர் சேகர் குமார் நீரஜ் IFS, உறுப்பினர்களான மதுரை வனகோட்டத்தை சேர்ந்த ஆனந்த் IFS, மருத்துவர் சிவகணேஷ்,மருத்துவர் கலைவாணன்,மருத்துவர் அறிவழகன், மருத்துவர் பிரதீப் ஆகியோர்களுடன் கலந்துரையாடினார்
அதனடிப்படையில்,ஆணைக்கட்டி அருகே மாங்கரை பகுதியில் அவுட்டுக்காயால் அடிபட்டு வாயில் புண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிற யானையை பிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும் உடல் நலம் குன்றிய யானைகளை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்.மேலும், ஆய்வு காலத்திற்குள் சிறப்பு குழு கோவை வனகோட்டத்தில் யானைகளின் மேம்பாடு பற்றிய ஆய்வினை தீவிர ஆய்வு செய்து நிரந்தர முடிவு எடுக்கும் வகையில் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினார்.