September 19, 2020
தண்டோரா குழு
திமுக கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை ” எல்லோரும் நம்முடன்” என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கையை கோவையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கடந்த 15.09.2020 அன்று , சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க.,வின் முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தில் , பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், “எல்லோரும் நம்முடன்” எனும் மாபெரும் புதிய இணையவழி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுகவை நோக்கி இளைஞர்களை கவரும் வகையிலும்,இணையவழி மூலம் எளிதாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளும் வகையிலும் இந்த மாபெரும் முன்னெடுப்பை தொடங்கி வைத்துள்ளார்.அடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய இணையவழி உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிக் கழகங்கள் மற்றும் வட்டங்களில் முகாம்கள் அமைத்து , இணையவழி மூலமாக புதிய இணையவழி உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுவதற்கு களப்பணியாற்ற உள்ளனர்.இந்த பணியை நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்
கழகத் தலைவர் தளபதி அவர்களின் எல்லோரும் நம்முடன் என்னும் மாபெரும் புதிய இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முதல் கட்டமாக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கி உள்ளோம் அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும் திமுகவை நோக்கி இளைஞர்கள் முன்னேற வேண்டும் மேலும் அடுத்த 45 நாட்களுக்கு 25 லட்சம் பேரை சேர்க்க தளபதி திட்டமிட்டுள்ளார். அதை நிறைவேற்றுவோம் என்றும், தமிழ் மொழி, இனம் காக்க, தளபதியின் கரங்களை வலுப்படுத்த திமுகவில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாக தெரிவித்தவர், விரைவில் எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும் என்றார்.