August 30, 2020
தண்டோரா குழு
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் 3 பேர் கொண்ட திருட்டு கும்பல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் கடந்த திங்கட்கிழமை சரோஜினி என்பவரது வீட்டில் 10 சவரன் நகை திருடப்பட்டதாக பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சரோஜினி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன்பாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.அதில் இரவு சுமார் 2 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அப்பகுதியில் சர்வசாதாரணமாக நடந்து வருவதும் சிசிடிவி கேமராக்களை கண்டதும் முகத்தினை கர்சீப்பால் மூடுவதும் பதிவாகியுள்ளது.
மேலும் பாலாஜி நகரில் உள்ள ராஜன் என்பவரது வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து திருடிச் செல்லும் காட்சி அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மூன்று பேர் கொண்ட திருட்டு கும்பலை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.திருட்டு கும்பல் நரசிம்ம நாயக்கன்பாளையம் இரவில் உலாவரும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருவில் பல சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தும் தைரியமாக வந்து கொள்ளை யடிப்பதைப் பார்த்தால் இனி திருடர்களை கண்காணிக்க புதிதாக ஏதாவது தொழில்நுட்பத்தை தான் கண்டறிய வேண்டும் போல.