June 26, 2026
தண்டோரா குழு
இந்திய தொழில் வர்த்தக சபையின் (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளை சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி இன்று (ஜூன் 26) கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் தொடங்குகிறது.
11-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சி, ஜூன் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக இந்த நிகழ்வு விளங்குகிறது.
இந்த ஆண்டுக்கான புளோ பஜார் 2026-ல் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, ஆடை, கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றன.
பெண்களின் தொழில்முனைவு திறனை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு துணைநிற்கும் நோக்கில் பிக்கி புளோ கோவை கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்கள் திரளாக வருகை தந்து பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.