September 26, 2020
தண்டோரா குழு
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றுவது என அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் தொடர்ந்து அங்கு அடிப்படை வசதிகள் இது வரை செய்யவில்லை என கூறி இன்று அடுக்குமாடி வளாகத்தின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,
பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருவதாக அடுக்கு மாடி நிர்வாகம் உறுதியளித்த படி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதாகவும்,850 குடியிருப்புகள் உடைய இந்த வளாகத்தில் குறிப்பாக குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை எனவும் போர் வாட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.