May 21, 2020
தண்டோரா குழு
கோவையிலிந்து 7 மாநிலங்களுக்கு 27,293 பேர் 21 சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரொனா எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கோவையில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவளித்து வந்தது.
இதைதொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அமுல்படுத்தியது. இதனையடுத்து கோவையில் இருந்து கடந்த 7 ஆம் தேதி 1140 பயணிகளுடன் பீகாருக்கு முதல் சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்கப்பட்டது.இதை தொடர்ந்து பீகாருக்கு 10 ரயில்களும், உத்திர பிரதேசத்திற்கு 4 ரயில்களும், ஒரிசாவிற்கு 3 ரயில்களும்,ஜார்கண்ட்டுக்கு 2 ரயில்களும், அசாம் மற்றும் ராஜஸ்தானுக்கு தலா ஒரு ரயில்கள் என மொத்தம் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 27,293 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கோவையில் இருந்து இயக்கிய 21 சிறப்பு ரயில்களுக்கு சுமார் 2.25 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல மணிப்பூர் மற்றும் மேகாலயாவிற்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பேருந்து மூலம் 300 க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொகையையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.