May 11, 2020
தண்டோரா குழு
ஊரடங்கு உத்தரவை மீறி கோவையின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக ஜவுளி கடைகள் இயங்கி வருகிறது.
கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் மே,17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஊரடங்கில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க,தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான ஜவுளி கடைகளின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள சிறிய வாசல் வழியாக வியாபாரம் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளான ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் சாலை மற்றும் பீளமேடு மசக்காளி பாளையத்தில் உள்ள சில்க்ஸ் சாரி விற்பனையகம் போன்ற கடைகளில் வாடிக்கையாளர்களை உள்ளே அமர வைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அதனை சாதகமாக்கி இது போன்ற பெரிய ஜவுளிகடைகளில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு மறைமுகமாக நடைபெறும் விற்பனையால் பச்சையை நோக்கி செல்லும் கோவை மாவட்டம் சிவப்பு நிறத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.