July 11, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தலைமை துணை ஆணையர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து கோவைக்கு புதிதாக இரண்டு துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி கோவை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பாலாஜி சரவணன் மற்றும் கோவை மாநகர தலைமையக காவல் துணை ஆணையராக பணியில் இருந்த செல்வகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.இதேபோல், கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித்குமார் மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மூன்று அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் அருளரசு கோவை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி.,யாக இருந்த செல்வகுமார் கோவை மாநகர தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.