May 27, 2020
தண்டோரா குழு
சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயினை கேரள அரசு அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த கோரி தபெதிக அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழக அரசு பராமரிப்பு செலவுகளை செய்து வருகிறது. சிறுவாணி அணையில் வறட்சி காலங்களில் தண்ணீர் எடுக்க பயன்படும் நிலத்தடியில் உள்ள ஒரு குழாயை கேரள அரசு கடந்த 2014ம் ஆண்டு மூடியது. இந்நிலையில், மற்றொரு குழாயினை மூடும் பணிகளை கேரள அரசு செய்து வருகிறது.
வறட்சி காலங்களில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயை அடைக்கும் கேரள அரசின் பணிகளை தடுத்து நிறுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஊரடங்கை பயன்படுத்தி கேரள அரசு குழாயினை மூடுவதாகவும் இதனால் வறட்சி காலங்களில் கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணைக்கு செல்ல விடாமல் கேரள அதிகாரிகள் தடுப்பதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கேரள அரசின் குழாய் அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.