September 15, 2020
தண்டோரா குழு
கோவை அருகே கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற மூதாட்டி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பன்னிமடை அருகேயுள்ள பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. 73 வயதான இவர் அதேபகுதியில் அழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வது வழக்கம்.அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றுள்ளார்.அப்போது எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், நிகழ்விடத்திலேயே லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கோவை வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி ஊடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.